அரசியல்

விமலின் தலைமையில் புதிய கூட்டணி உதயம்! – பஸிலின் பிடிக்குள் இருந்து 21ஐ மீட்க வியூகம்

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து புதியதொரு ‘அரசியல் கூட்டணி’யை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கூட்டணிக்கான பெயர் மற்றும் கொள்கைத் திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

‘கூட்டு தலைமைத்துவம்’ என்பது பிரதான இலக்காக இருந்தாலும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவே ‘தலைவர்’ என்ற அந்தஸ்திலிருந்து செயற்படுவார் எனவும் வாசு குறிப்பிட்டார்.

புதிய கூட்டணியானது, அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்கினால், பிரதமர் வேட்பாளர் யார் என்ற வினாவுக்கான பதிலையும் வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ளார். ‘விமல் வீரவன்ச’ அதற்கு பொருத்தமானவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற விசேட கூட்டம் நேற்று மாலை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது அரசமைப்புக்கான உத்தேச 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட வேண்டிய திருத்தங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளன. அந்தவகையில் 9 கட்சிகளின் யோசனை நீதி அமைச்சருக்கு இன்று அனுப்பிவைக்கப்படும் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

21 ஐ தோற்கடிப்பதற்கு பஸில் ராஜபக்ச முற்பட்டாலும், அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என 9 கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய கட்சிகளையும், அமைப்புகளையும் இணைத்துக்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, புதிய ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமமாஜகக்கட்சி, தேசிய காங்கிரஸ், யுதுகம உட்பட 10 கட்சிகள் மீளப்பெற்றன.

இதனையடுத்து அக்கட்சிகள் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாகச் செயற்பட்டது. இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த டிரான் அலஸ், அரசை ஆதரித்து, அமைச்சு பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதனால 10 கட்சி கூட்டணியில் இருந்து அவரின் கட்சி வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது 9 கட்சிகள் செயற்படுகின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் 9 கட்சிகளுடன் அரசியல் உறவு இருக்கின்றது. எனினும், புதிய கூட்டணியில் இடம்பெறுவது சம்பந்தமாக அக்கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆனால், தேர்தலொன்று வரும்பட்சத்தில் அக்கட்சிகளுடன் இணையும் சாத்தியமே காணப்படுகின்றது.

21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன என்ற அச்சத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வெளியிட்டிருக்கின்றது.

– ஆர்.சனத்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version