அரசியல்

இலங்கைக்குத் தொடர்ந்து உதவும் இந்தியா! – மோடி உறுதி

Published

on

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற அரச விழாவில், 31 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபா மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது இலங்கை விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கை இப்போது கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது.

அங்கே உள்ள நடப்பு நிலை உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும்.

நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அளித்து வருகின்றது.

குறிப்பாக, நிதி உதவி, எரிபொருள், உணவு, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை மத்திய அரசு வழங்கி வருகின்றது.

பல இந்திய தன்னார்வ அமைப்பினரும், தனிநபர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்துக்கு உதவிகளை அளித்து வருகின்றனர்.

இலங்கைக்குப் பொருளாதார ஆதரவுகளை வழங்குவது தொடர்பாக சர்வதேச மன்றங்களில் இந்தியா குரல் கொடுக்கின்றது.

ஜனநாயக உறுதித்தன்மை மேலோங்கவும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்.

இதேவேளை, எனது யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மறக்க முடியாது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முதலாவது இந்தியப் பிரதமர் நானே.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன” – என்றார்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கச்சதீவை மீட்டு அவர்களின் உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் என்பதை நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version