அரசியல்

புதிய அமைச்சரவையில் முதல் தமிழ், முஸ்லிம்! (படங்கள் இணைப்பு)

Published

on

சர்வகட்சி அரசில் மேலும் 8 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள், கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதற்கமைய கோட்டாபய – ரணில் தலைமையிலான சர்வகட்சி அமைச்சரவையில் முதல் தமிழராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடற்றொழில் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை, சர்வகட்சி அமைச்சரவையில் முதல் முஸ்லிமாக நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சுற்றாடல் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

டக்ளஸுக்கும் நஸீருக்கும் கோட்டாபய – மஹிந்த தலைமையிலான கடந்த அமைச்சரவையில் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களே மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான மஹிந்த அமரவீர கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அமைச்சரவையில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த பந்துல குணவர்தனவுக்குப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுடன் வெகுஜன ஊடக அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. இவரே அமைச்சரவை பேச்சாளராகவும் நியமிக்கப்படக்கூடும்.

கடந்த வாரம் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட கெஹலிய ரம்புக்வெல, இன்று நீர் வழங்கல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை, கடந்த வாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகப் பதவியேற்ற ரமேஷ் பத்திரண, இன்று கைத்தொழில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக விதுர விக்கிரமநாயக்கவும், நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்ஹவும் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version