அரசியல்

‘சுயாதீன’ நாடாக இலங்கை: இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு!

Published

on

இலங்கையானது, இறையாண்மையுள்ள சுதந்திர நாடாக உதயமாகி, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு, 1972 இல் இதேபொன்றதொரு நாளில்தான் சட்டமாக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டது.

1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிவாகை சூடியது. பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மீண்டும் பதவியேற்றார்.

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியிலிருந்து, 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதனை ‘முழு சுதந்திரம்’ மாக கருதப்படவில்லை. ஒரு ‘சுயாட்சி’யாகவே பார்க்கப்பட்டது.

1947 இல் இருந்து 72வரை அமுலில் இருந்த சோல்பறி யாப்பின் பிரகாரம், பிரிட்டனின் ‘ஆட்சிமுறை’ தலையீடு தொடரவே செய்தது. பிரிட்டன் மகாராணியால் நியமிக்கப்படும் ஆளுநர் ஊடாக அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அரச தலைவராக பிரித்தானிய மகாராணியே திகழ்ந்தார்.

பிரிட்டன் படைகள் வரலாம், அனுமதியின்றி வான் பரப்பை பயன்படுத்தலாம் என்பது உட்பட பல நடைமுறைகள் அமுலில் இருந்தன.

1970 பொதுத்தேர்தலின்போது இலங்கைக்கே உரித்தான அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்ற உறுதிமொழியை ஶ்ரீமாவோ அம்மையார் தலைமையிலான கூட்டணி வழங்கியிருந்தது.

தேர்தலின் பின்னர் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டது. இதன்பிரகாரம் இலங்கையானது தன்னாதிக்கமும், இறைமையும் கொண்ட சுயாதீன குடியரசாக உதயமானது.

ஆளுநர் பதவி நீக்கப்பட்டு, ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது. குடியரசின் தலைவராக ஜனாதிபதி விளங்கினார். பிரதமரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி நியமிக்கப்படுவார். (தேர்தல் ஊடாக அல்ல). அந்தவகையில் இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக வில்லியம் கொபல்லாவ நியமிக்கப்பட்டிருந்தார்.

1977இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி புதிய அரசமைப்பு அறிமுகப்படுத்தியது. ஜனாதிபதி ஆட்சிமுறைமை உருவாக்கப்பட்டது. அந்த யாப்பே இன்றளவிலும் அமுலில் உள்ளது. 20 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது 21 ஆவது திருத்தச்சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

– ஆர்.சனத்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version