அரசியல்

பொறுப்புடன் செயற்படுங்கள்! – அலி சப்ரி கோரிக்கை

Published

on

நாட்டின் பொருளாதாரம் உக்கிரமடைந்துள்ளதையடுத்து அனைவரும் இணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமே தவிர குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எரியும் நெருப்பில் வைக்கோலைப் போட முற்பட வேண்டாம். அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு அனைவரும் உண்மை நிலையை உணர்ந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டுமென முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

” நாட்டின் பொருளாதாரம் உக்கிரமடைந்துள்ளது. மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெ டுப்பது எவ்வாறு என்பது தொடர்பிலேயே பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும். இனியும் அரசியல் நோக்கங்களுக்காக ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டிக் கொண்டு செயற்பட முற்படக்கூடாது. அவ்வாறானால் நாம் விஜயன் காலத்திலிருந்தே அதை செய்ய வேண்டிவரும். நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கையுடனேயே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். நம்பிக்கையுடனேயே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்.

நான் அமைச்சர் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்னர் 42 மில்லியன் ரூபா வருமான வரி நிலுவையை செலுத்திவிட்டே பதவியை பொறுப்பேற்றேன். அரசியல் மூலம் நான் ஒரு சதம் கூட உழைக்கவில்லை. ஆனால் வீடு எரிவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் தரப்பினரையும் நான் பார்க்கின்றேன். அந்தளவு மோசமான கலாசாரம் எமது நாட்டில் தலைதூக்கி இருக்கின்றது.

இதன் பின்னர் நாடாளுமன்றம் வருவதற்கு நான் நினைக்கமாட்டேன்.

நாட்டில் வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும். சுங்கத் திணைக்களத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் வருமான வழிமுறைகள் தொடர்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version