அரசியல்

அரசியல் நாடகங்களை விடுத்து தீர்வை மேற்கொள்ளுங்கள்! – சஜித் வலியுறுத்து

Published

on

சர்வதேசத்தை திருப்திப்படுத்த 13 பிளஸ் எனவும், உள்நாட்டில் அரசில் இருப்பை தக்க வைக்க 13 மைனஸ் எனவும் கூறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றாமல், 13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக வழங்கப்பட்ட அரசியல் தீர்வை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” 30 வருடகால போரை முடிவுக்குகொண்டுவருவதற்கு பெரும் பங்காற்றிய படையினரை இந்நாளில் நினைவுகூருகின்றேன். அதேபோல வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கருத்துகளையும் பெறப்பட்டு உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13 பிளஸ் எனவும், 13 மைனஸ் எனவும் அரசியல் நாடகமாடாமல், 13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக வழங்கப்பட்ட தீர்வை பாதுகாக்க வேண்டும்.

மே – 09 ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்களை நாம் கண்டிக்கின்றோம். வன்முறையுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மே 06 ஆம் திகதி அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் இப்படியான சம்பவம் இடம்பெறுவதற்கு அடிப்படை காரணியாக அமைந்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

அலரிமாளிகையில் இருந்துதான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தியதால்தான் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கவலையை வெளிப்படுத்திக்கொள்கின்றோம். மே – 09 மற்றும் அதற்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்களை நாம் அனுமதிக்க போவதில்லை. சிலர் இனவாதத்தை தூண்டுவதற்குகூட முற்பட்டனர். பொறுப்புக்கூற வேண்டியவர்கள், தகுதி தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version