அரசியல்

‘மே 18 – ஒன்று கூடி அஞ்சலியுங்கள்’ – மாவை சேனாதிராசா கோரிக்கை

Published

on

2022 “மே” மாதம் 18 அன்று வரை அழிக்கப்பட்ட தமிழ்த் தேசமக்களை நாமெல்லாம் நினைவு கூர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும், பொருத்தமான தங்களிடங்களிலும் ஒன்று கூடி அஞ்சலி செய்யுங்கள் என
இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இலங்கையில் தமிழர் தேசமக்கள் வரலாற்றில் தமிழின மக்கள் அழிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதன் உச்ச காலகட்டமாக 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சிகளும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

உலகில் பல நாடுகளும், இன மக்களும் தங்கள் விடுதலைப் போராட்ட வரலாறுகளில் ஒரு நாளை முக்கியமாக அடையாளப்படுத்தி விடுதலை பெறும்வரை ஆண்டுதோறும் அந் நாளில் ஒன்று கூடி “விடுதலை பெறுவோம்” எனச் சத்தியப் பிரகடனம் செய்து வந்துள்ளனர் அந்த இலட்சியத்தை அடைந்தும் உள்ளனர்.

அவ்வாறே இலங்கையில் தமிழ்த் தேச மக்களும் “மே” மாதம் 18ஆம் நாளை அடையாளப்படுத்தி இன அழிவுகளை நினைவுகூர்ந்தும் “விடுதலை பெறுவோம்” என்றும் பிரகடனம் செய்து செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் அரசுவைத்து ஆண்ட தமிழ் மக்கள் ஐரோப்பியரிடம் போரில் இழந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காகப் போராடி வருகின்றனர் என்பது வரலாறு. 1948ன் பின் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததென்றாலும் தமிழர் தேசத்திற்கும் மக்களுக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

இன்றுள்ள உலக, பிராந்திய சூழலில் ஒன்றுபட்ட இலங்கையில் சுயநிர்ணய உரிமையுள்ள தமிழ்த் தேச மக்களின் அரசியல் உரித்தை அங்கீகரித்து இணைப்பாட்சிக் கட்டமைப்பில் தமிழ்த் தேச மக்களின் தன்னாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வொன்றைப் பெறுவதையே இலக்காகக் கொண்டு தமிழ்த் தேச மக்கள் செயற்படுகிறார்கள்.

இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொழுது “இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கூட்டுறவு அடிப்படையிலான சமஸ்டி ஆட்சி முறை சிறந்தது” என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

இலங்கையில் இன்று தீவிர பொருளாதார நெருக்கடியினால் பஞ்சம், பசி, பட்டினியால் மக்கள் உயிருக்காக போராடுகின்றனர். குறிப்பாக, தென்னிலங்கை இளம் சமூகம் இந்த நெருக்கடிகளுக்கு காரணம் என்று குற்றம் சுமத்தி ஜனாதிபதி கோத்தாவும், அரசும் பதவி துறக்க வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்படவேண்டுமென்று அமைதிவழியில் போராடுகின்றனர்.

ஒரு மாத காலமாக காலிமுகத்திடலிலும், ஏனைய பாகங்களிலும் அமைதி வழியில் நடைபெற்ற இப் போராட்டங்கள் மீது அண்மையில் வன்முறைகளையும் அரசுத்துறையே தூண்டியிருக்கிறது. உயிர்ப் பலிகளும், சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டமையும், நாட்டில் அரசு ஆட்சியற்ற நிலைமையும், இராணுவ ஆட்சி ஏற்பட்டுவருகிறது. எனும் அச்சமும் தீவிரமடைந்துள்ளது.

உணவுப் பண்டங்கள், மருந்து வகைகள் இல்லாமல் தொழிலில்லாமல், பணமில்லாமல் உலக நாடுகளிடம் கடனுக்குக் கடன்பட்டும் தீர்வு இல்லாமல் இருக்கும் நிலை. சர்வதேச நாடுகளின் நிதி நிறுவனங்களின் உதவிகளுக்காகப் பேச்சுக்கள் நடக்கின்றன. போராட்டங்களுக்கும், தீர்வு காண்பதற்கும் தலைமைத்துவமற்ற நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணுவதற்கு சர்வதேச சமூகம் தலையீடு செய்கிறது. பேச்சுக்களில் அரசியலமைப்பு மாற்றங்களுக்கும், தலைமைத்துவ மாற்றங்களுக்கும் இதுவரை நடைபெற்ற பேச்சுக்களில் இன்னும் இணக்கமில்லை.

இதற்கு அப்பால் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் பலிகொடுத்த தமிழ்த் தேசமக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உச்சரிக்கப்படுகிறது. நிச்சயிக்கப்படாத உச்சரிப்புக்கள் என்றாலும் தமிழ் மக்களின் தலைமைத்துவங்கள் ஒன்றுபட்ட ஒரே குரலான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவும் அரசியல் தீர்வை எட்டவும் அர்ப்பணிப்புடன் திடசங்கற்பங்கொள்ள வேண்டும். இச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமானால் இலங்கையில் உறுதியான ஆட்சி வேண்டுமென்ற நிலை முக்கியத்துவம் பெறுகிறது. பண்டங்களின் விலைகள் மேலும் உயர்த்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. உறுதியான அரசு நிலைக்க வேண்டுமானால் இலங்கையின் இனப்பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டுமென்ற கருத்து மேலெழுந்து வருகின்றது.

இன்றுள்ள இலங்கையின் நிலை, சர்வதேச மற்றும் அயல் நாடுகளின் குறிப்பாக இந்திய நாட்டின் தலையீடுகள் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டியதும் அதன்போது உயர்ந்த மூலோபாயங்களுடன் சிறந்த தலைமைத்துவத்துடன் தமிழர் தேசத்து மக்கள் செயலாற்றவும் திடசங்கற்பங் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகும்.

அண்மைக்காலங்களில் ஐ.நா அமைப்புக்களிலும் சர்வதேச தீர்மானங்களிலும் மியன்மாரில் றொஹின்கிய மக்கள் வெளியேற்றப்பட்டும், அச்சுறுத்தலுக்குட்பட்டும் உயிர்ப் பலியாக்கப்பட்டவற்றையும் இனப்படுகொலை என்று தீர்மானித்து சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு சிபார்சு செய்யப்படுகின்றது.

அடுத்து அண்மையில் ரஸ்யா – உக்ரேன் போரில் ஆயிரக்கணக்கில் உக்ரேனியர்கள் கொல்லப்பட்டமையை குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இச் செயல் ஒரு இனப் படுகொலை தான் நடக்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

உண்மையில், இலங்கையில் 70 ஆண்டுகளில் போர்க்களத்தின் இறுதியில் 2009 காலப்பகுதியிலும் இதற்கு முன்னர் இனக் கலவரங்களிலும் இலட்ச்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் பல ஆயிரம் மக்கள் காணாமலாக்கப்பட்டும், பல இலட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டும் இருப்பதானது இனப்படுகொலையே என்று நிரூபிக்கலாம்.

1983லேயே இந்தியப் பாராளுமன்றத்தில் பிரதமர் இந்திராகாந்தியே இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிப்பது இலங்கையிலும் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்காகவேதான்.

இவ்வாறான இனப் படுகொலை சம்பவங்கள், அவற்றை பிரதிபலித்து நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சிகள் இலங்கையில் இனப் பிரச்சினை தீர்வு ஒன்றை எட்டுவதற்கு பலமானதாக இருக்கும் என நம்புகிறோம்.

எனவே 2022 “மே” மாதம் 18 அன்று வரை அழிக்கப்பட்ட தமிழ்த் தேசமக்களை நாமெல்லாம் நினைவு கூர்ந்து; முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும், பொருத்தமான தங்களிடங்களிலும் ஒன்று கூடி அஞ்சலி செய்து அந்த மக்கள் ஆத்ம சாந்திக்காகவும் தமிழ்த் தேசமக்கள் விடுதலை பெறுவதற்காகவும் எம்மை அர்ப்பணிக்கிறோம் என்று பிரகடனம் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றோம் – என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version