இலங்கை

யாழில் எரிபொருள்நிரப்பு நிலையத்தில் குழப்பம் – விநியோகத்துக்கு பொலிஸாரால் தடை!

Published

on

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட குழப்பத்தால், பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது,

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் முதல் பெற்றோல் முடிவடைந்து விட்டதாக ஊழியர்கள் கூறிய போதிலும் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது.

அதனால் , அங்கு கூடிய சில தமக்கும் பெற்றோல் தருமாறு கோரிய போது, யாழ்.போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் , தாதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்குகின்றோம் என கூறியுள்ளனர்.

அதன்போது , அங்கு நின்று இருந்த சிலர் , ஒரு வைத்தியசாலை ஊழியர் ஐந்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றோல் அடித்து செல்வதனை எவ்வாறு எம்மால் அனுமதிக்க முடியும் என கேட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸார் தமக்கு பெற்றோல் நிரப்ப ஊழியர்களிடம் கேட்டபோது , அவர்களுக்கு பெற்றோல் வழங்க ஊழியர்கள் தயாராகியபோது , மணித்தியால கணக்காக காத்திருக்கும் எமக்கு பெற்றோல் இல்லை என கூறிய நீங்கள், பொலிஸாருக்கு பெற்றோல் வழங்க எங்கிருந்து பெற்றோல் வந்தது? அவர்களுக்கு பெற்றோல் அடித்தால் எமக்கும் அடிக்க வேண்டும் என கோரினார்கள்.

அதன்போது , இரு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்ற போதிலும் , ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் தனக்கு பெற்றோல் அடிக்க வேண்டும் என ஊழியர்களிடம் கண்டிப்பான குரலில் கூறினார்.

அங்கிருந்தவர்களின் குழப்ப நிலைமை காரணமாக ஊழியர்கள் அதற்கு தயங்கியபோது , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ” எனக்கு அடிக்க முடியாத பெற்றோல் இங்கே யாருக்கும் அடிக்கக்கூடாது” என கோபத்துடன் கூறி அங்கிருந்து சென்றார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சென்ற ஒரு சில நிமிடத்தில் மேலதிக பொலிஸார் மற்றும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வாகனத்தில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து , அங்கிருந்தவர்களிடம் பிரச்சனை தொடர்பில் கேட்டறிந்தனர்.

பின்னர் குறித்த எரிபொருள் விநியோக நிலையத்தில் எவருக்கும் பெற்றோல் விநியோகிக்க வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி, அங்கிருந்த ஏனையவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

யாழில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிப்பதில் மோசடிகள், கொள்கலன்களில் எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படும் நிலையிலும் இதுவரை நடவடிக்கை எடுக்க எவரும் முன் வரவில்லை என பலரும் கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version