அரசியல்

கோட்டா அரசைப் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் இன்று ஹர்த்தால்!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டங்களையும் தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்துத் தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். ஆனால், ஜனாதிபதியும் அரசும் மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் எதேச்சாதிகாரமாக ஆட்சி புரிந்து வருகின்றனர்.

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாகச் செயற்பட்டுவரும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிராகக் கடந்த 28ஆம் திகதி வியாழக்கிழமை அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்குத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.

சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், கல்வி உட்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்றைய ஹர்த்தாலுக்குத் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவாக நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை ரயில்வேத் தொழிற்சங்கத்துடன் இணைந்த சுமார் 40 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மேலும் இன்றைய ஹர்த்தாலுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கித் தொழிற்சங்கங்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் இன்றைய ஹர்த்தாலில் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத்துறை ஊழியர்களும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அதேநேரத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர்கள் கையில் கறுப்புப் பட்டி அணிந்து இன்றைய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவளிப்பார்கள்.

இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு ஆதரவாக வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடி ஒத்துழைக்குமாறும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றிவைக்குமாறும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஒலிபெருக்கி மூலம் பிரார்த்தனைகளை நடத்துமாறும் ஹர்த்தால் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபடுவதையோ அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதையோ தவிர்த்து அமைதியான முறையில் போராட்டங்களைத் தொடருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் அரசம் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுப்பதற்குத் தவறினால் 11ஆம் திகதி முதல் தொடர்ச்சியான ஹர்த்தாலாக இது மாற்றப்படும் எனவும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் எச்சரித்துள்ளது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version