அரசியல்

யார் புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை! – எம்.பி சுமந்திரன் தெரிவிப்பு

Published

on

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் யார் புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது யார் பிரதமராக வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்பொழுது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகின்றது. பிரதமரை மாற்ற வேண்டும் என்று ஒரு குழு விடாப்பிடியாக நிற்கின்றார்கள். எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளது

தற்போதைய பிரதமர் பதவி விலகினால் புதியவர் பிரதமராக வருவார். அவடன் ஒரு புதிய அமைச்சரவை உருவாகும். அந்த அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஐவர் கொண்ட குழுவினை உருவாக்கியுள்ளார்கள். அந்த ஐவர் கொண்ட குழுவில் உள்ளோரில் எமக்கு திருப்தியில்லை. அவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

ஜனாதிபதி நாட்டின் தலைவர். அவர் அவ்வாறே இருப்பார். அதேபோல பிரதமர் பதவி விலகினால் இன்னொரு பிரதமர் வருவார். அவருடன் இணைந்து புதிய அமைச்சரவை உருவாகும். அவ்வாறு உருவாகும் அமைச்சரவை தற்போதுள்ள அமைச்சரவையை விட மிகவும் கொடூரமான அமைச்சரவையாக இருக்குமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என ஆழமாக பார்க்கவேண்டும்.

எனவே நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பதன் மூலமே நாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படும். இந்த நாட்டில் எவர் பிரதமர் பதவிக்கு வந்தாலும் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. அத்தோடு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனினும் அந்த விடயம் தொடர்பில் நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் ஆராய்ந்து முதல்கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

தற்பொழுது இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் கடந்து புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள தமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version