அரசியல்

தென்னிலங்கை மே தின கூட்டங்களை ஆக்கிரமித்த ‘கோட்டா கோ ஹோம்’ கோஷம்!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தியே தெற்கு அரசியல் களத்தில், எதிரணிகளின் மே தின பேரணிகளும், கூட்டங்களும் இடம்பெற்றன.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில், அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள்மீது சரமாரியாக விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன. அத்துடன், மஹிந்த ராஜபக்ச இல்லாத இடைக்கால அரசை ஏற்கமுடியாதெனவும் மொட்டு கட்சி திட்டவட்டமாக அறிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அகட்சியின் பிரமுகர்கள், ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஜனாதிபதி தலைமையிலான சர்வக்கட்சி இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது எனவும் இடித்துரைத்தனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான மே தின பேரணியும், கூட்டமும் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, புதிய அரசை அமைப்பதற்கான போராட்டம் தொடரும் என அறிவித்தார். கட்சி தலைமையகத்திலும் மே தனி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் மே தின நிகழ்வுகள் நான்கு மாவட்டங்களை மையப்படுத்தியமாக அமைந்தது. கொழும்பில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரையாற்றிய கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சியின் முக்கியத்துவத்தை பட்டியலிட்டார்.

11 கட்சிகளில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் தனியே மே தின கூட்டத்தை நடத்தின. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் பத்தரமுல்லையில் தனி நிகழ்வை நடத்தியது.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவில்லை. எனினும், மொட்டு கட்சிசார்பு தொழிற்சங்கத்தால் மே தின கூட்டமொன்று நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மொட்டு கட்சி உறுப்பினர்கள், அரசு பதவி விலகாது எனவும், மஹிந்த இல்லாத சர்வக்கட்சி இடைக்கால அரசை ஏற்கமுடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தனர். காலி முகத்திடல் போராட்டக்காரர்களாலும் மே தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

#SriLankaNews #Artical

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version