இலங்கை

இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கு உதவுங்கள்! – தமிழக முதலமைச்சரிடம் வடக்கு மீனவர்கள் வேண்டுகோள்

Published

on

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்தது போல கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் நேற்றைய தினம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால்மா உணவு பொருட்களை வழங்குவதாக அறிவித்ததை நாங்கள் வடக்கு கடற்றொழிலாளர்கள் என்ற ரீதியில் அவரது செயற்பாட்டை நாங்கள் வரவேற்கின்றோம்.

அத்தோடு அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் அதேபோல தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும் அத்தோடு அத்தனை சட்ட சபை உறுப்பினர்களுக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள் ஆகிய
நாங்கள் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றோம்.

தொப்புள் கொடி உறவாக இவ்வாறு நீங்கள் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உணவு பொருட்களை அனுப்பமுன் வந்து இருக்கிறீர்களோ அதே போலத்தான் எங்களது தொப்புள் கொடி உறவாகிய தமிழ்நாட்டு மீனவர்களால் கடந்த பத்து வருடமாக நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். அத்தோடு நாங்கள் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் தமிழக இழுவை மடி தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

நாங்கள் கடந்த பத்து வருடங்களாக இழுவை மடி தொழிலை வடபகுதியில் நிறுத்துமாறு கோரி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டு முதலமைச்சர் நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு நாங்கள் பகிரங்க மடல் கூட அனுப்பி இருந்தோம்.

நீங்கள் அது தொடர்பில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மிகவும் கவலையளிக்கின்றது.நாங்கள் 50 ஆயிரம் குடும்பங்கள் இரண்டு லட்சம் மக்கள் இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்படுகின்றோம். எங்களுடைய தொழில் அழிக்கப்படுகின்றது. வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு முரணான தொழில்முறையால் நாம் அழிக்கப்படுகின்றோம் அது பற்றி நீங்கள் பேசாமல் மௌனம் காத்து இருப்பது இந்த இரண்டு லட்சம் வடபகுதி தொழிலாளர்களுக்கு கவலை அளிக்கின்றது.

நேற்றைய தினம் சட்டசபையில் உணவு பொருட்களை அனுப்புவதற்கு எடுத்த தீர்மானத்தை போல வடக்கு மீனவ தொழிலாளர்களுக்காக இழுவை மடி பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version