அரசியல்

தொழிற்சங்க போராட்டம்! – மலையகமும் ஸ்தம்பித்தது

Published

on

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று (28.04.2022) பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அரசதுறை, அரசசார்பற்ற தனியார் துறை, பெருந்தோட்டத்துறை, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகள் கூட்டாக இணைந்தே இன்று தொழிற்சங்க ;நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள், மின்சார சபை தொழிற்சங்கங்கள், சுகாதார தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியர்சார் தொழிற்சங்கங்கள், தபால் துறைசார் தொழிற்சங்கங்கள், பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், வங்கிசார் தொழிற்சங்கங்கள் உட்பட மேலும் பல தொழிற்சங்கங்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

மலையகத்தில் உள்ள பிரதான இரு கட்சிகளான தமிழ்த் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இப்போராட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.

இதற்கமைய தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லவில்லை. வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் 90 வீதான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

அதேபோல சதொச, எரிபொருள் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றின் முன்னால் நீண்ட வரிசை காணப்பட்டது. பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பித்திருந்தது.

இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபட்டன. ஆட்டோ சாரதிகள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version