அரசியல்

உடன் பதவி விலகுங்கள்! – மஹிந்தவிடம் கோட்டா, சமல் நேரில் கோரிக்கை

Published

on

“நாட்டின் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுக்காண பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச உடனடியாக விலக வேண்டும்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோர் பிரதமர் மஹிந்தவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

“பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகுவாரா? இல்லையா? என்பதுதான் நாட்டில் இப்போது பேச்சு.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் ஜனாதிபதி மாளிகையில் கோட்டா, மஹிந்த, சமல், பஸில் ஆகியோர் ஒன்றுகூடி ஆலோசனைகளை நடத்தினர்.

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகவேண்டும் என்பதுதான் சமல், கோட்டாவின் கோரிக்கை.

பெரிய அண்ணன் சமலின் சொல்லைத் தட்டாத மஹிந்த அதற்குச் சம்மதித்தபோதும், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகக் கூடாதென்று பிடிவாதமாய் இருந்திருக்கின்றார் பஸில்.

“கம்மன்பில 120 எம்.பிக்கள் இருப்பதாகச் சொல்வது எம்மை அச்சுறுத்தவே. அப்படி இருந்தால் அவர்கள் காட்டட்டும். எங்களுக்கு 105 பேருக்கும் மேல் ஆதரவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்காது என்று அறிந்தேன். எமக்கு ஆதரவளிக்கும் எம்.பிக்கள் எண்ணிக்கை இன்னும் கூடும். நாடாளுமன்றம் கூட முன்னர் அதனை நான் செய்வேன். அதுவரை பதவியை இராஜிநாமா செய்யவேண்டாம்” என்று இங்கு பஸில் ஆவேசமாகப் பேசியதாகத் தகவல்.

ஆனால், பிரதமர் கௌரவமாக பதவி விலகினால் நல்லது என்று விளக்கிய சமல், அப்படி நடந்தால் இப்போது உள்ள மக்களின் போராட்டம் கொஞ்சம் தணியும் என்று சாரப்பட பதிலளித்துள்ளார்.

”முதலில் பிரதமரை அகற்றி பின்னர் சில வாரங்களில் சபாநாயகரையும் அகற்றி ஜனாதிபதியையும் குற்றவியல் பிரேரணையில் அகற்ற முயலுவார்கள். பிறகு பெரும் விளைவுகள் வரலாம்” என்று அதற்குப் பதிலளித்துள்ளார் பஸில்.

பிரதமர் பதவி விலக மகாநாயக்க தேரர்மார் கேட்பதால் அப்படி நடக்காத பட்சத்தில் அவர்கள் தங்களைச் சந்திப்புகளுக்கு நேரம்கூட தராத நிலைமை வரலாம். அது மக்கள் எதிர்ப்புக்கு மேலும் வலுவூட்டும் என்று இங்கு பேசப்பட்டது.

“நான் பதவி விலகமாட்டேன். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றி என்னை விலக்கட்டும். நான் எதிர்க்கட்சியில் சென்று அமர்கின்றேன். எனக்கு எதிராக வாக்களிப்போரையும் நான் நேரடியாகப் பார்க்க ஆசைப்படுகின்றேன். எதிர்க்கட்சியில் இருந்து நான் அரசியல் செய்வேன். நான் என்னசெய்வேன் என்பதை அப்போது பாருங்கள்” என்று இங்கு குறிப்பிட்ட பிரதமர், இப்போது பலரின் உண்மை முகங்கள் அம்பலமாகியுள்ளன எனவும் சாடியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் டலஸ், மைத்திரி உட்பட்டோர் நகர்த்தி வரும் காய்கள் அவர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது எனத் தெரிகின்றது.

22 அமைச்சர்கள்… அதனைக் கண்காணித்து ஆலோசனை வழங்க தேசிய நிர்வாக சபை… இடைக்கால அரசு இதுதான்…. தேசிய சபையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள்.. அமைச்சரவையில் தகுதியானவர்களுக்கு இடம்… என்று பேச்சு நடத்தப்படுகின்றது.

இந்தப் பேச்சுகள் குறித்தான தகவல்கள் அவ்வப்போது ஜனாதிபதியின் காதுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதேசமயம் பொதுஜன முன்னணியின் பல உறுப்பினர்கள் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குகின்றனர். அவர்களில் ஒருதரப்பு இன்று புதன்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்துக் கடிதமொன்றை கையளித்து புதிய இடைக்கால அரசை அமையுங்கள் என்று கேட்கப்போகின்றனர்” – என்றுள்ளது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version