அரசியல்

வீதித் தடைகளை அகற்றுங்கள்! – அரசிடம் சஜித் கோரிக்கை

Published

on

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களதிகாரம் என்ற சுனாமியால் அகப்பட்டுள்ள அரசு, தற்போது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களுக்கு எதிராக அழுத்தங்களையும் ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

கொழும்பு, கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் வீதிகளை மறித்து நிரந்தர வீதித் தடைகளை இட்டுள்ளமை அதன் ஒரு செயற்பாடு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லோட்டஸ் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையால் வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசிப்பதற்கு வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மக்கள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் பல போராட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் அரசு அச்சத்தில் இருப்பதுடன் இந்த கேலிக்கூத்தான வீதித் தடைகள் மூலம் மக்களின் போராட்டங்களை தடுக்கமுடியாது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டின் அங்கத்தவர்களாகவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துவதற்கு இருக்கும் உரிமையை அரசோஅல்லது வேறு எந்தச் சக்தியினாலும் மீற முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

சுமார் இரு வாரங்களுக்கு மேலாக ஜனாதிபதி மற்றும் அரசை நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைப்பதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு தற்போது பயங்கரவாதப் பாணியை பயன்படுத்தி நிரந்தர வீதித் தடைகளை உருவாக்கி, தாங்கள் அடைக்கப்பட்டிருக்கும் வரையறையை சற்று விரிவாக்குவதற்கே தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் வெடித்துள்ள நிலையில், மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுவத்துவதற்கு அரசிடம் எந்தவொரு துரும்புச்சீட்டும் தற்போது இல்லை என்பதுடன், நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி அரசு சிந்திக்கக்கூட வேண்டிய தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக தமது சொந்த அதிகார நிகழ்ச்சி நிரலுக்காக தன்னிச்சையான ஆட்சியில் ஈடுபட்ட கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக எழுந்துள்ள இந்த மக்கள் சக்தி, நிபந்தனையற்ற, நியாயமானவை என நம்புக்கையுடன் கருதுவதாகவும், மக்களின் உரிமைகளுக்கு எதிராக அரசு தொடங்கும் எந்தவொரு அடக்குமுறைக்கு எதிராக தயக்கமின்றி முன்நிற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இருமுறை சிந்திக்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version