அரசியல்

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்: பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசுக்கு எதிராக கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் எம்.ஏ.பிரபாகரன் இன்று நிராகரித்தார்.

நூற்றுக்கணக்கானவர்கள் சில நாட்களாக காலிமுகத்திடலில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு கொழும்பு – கோட்டை பொலிஸார் மன்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏதேனும் முறுகல் நிலை ஏற்படும் சாத்தியமுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டிய கோட்டை பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் 16 பேருக்கும் ஏற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

வன்முறையோ, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் சம்பவங்களோ இடம்பெறுவதற்கு முன்னர், உத்தரவு பிறப்பிப்பதற்கான இயலுமை இல்லை என்று தெரிவித்த மேலதிக நீதிவான், சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஏதேனும் இடம்பெற்றால், பொலிஸ் கட்டளைச் சட்டத்துக்கமைய உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது என்றும் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைக்காக முன்னிலையாவதற்காக அதிகளவான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version