அரசியல்

ஒதுங்கியிருப்பதே காலப் பொருத்தம்! – தென்னிலங்கை போராட்டங்கள் தொடர்பில் முன்னாள் எம்.பி. சரவணபவன் தெரிவிப்பு

Published

on

தங்களின் மீட்பர்கள் என்று சிங்கள மக்கள் யாரை நம்பினார்களோ அவர்களை இன்று அடித்து – துரத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டம் சிங்கள மக்களுக்கானது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதே பொருத்தம். இந்தப் போராட்டத்துக்கு இடையில் பேரம் பேசலுக்கான வாய்ப்புக்கள் ஏதாவது தமிழ் தரப்புக்கு கிடைக்குமாக இருந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் தென்னிலங்கையில் முளைத்துள்ள போராட்டங்கள் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த இலங்கையையும் ஆட்டம்காணச் செய்துள்ளது.
இந்த நெருக்கடியின் மூலவேர் தனித்து பொருளாதார பிரச்சினையன்று. இந்தத் தீவில் காலாதிகாலமாக, மகாவம்சப் புனைவுகளை நம்பி சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றமைக்கான விளைவுகளையே இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்கள மக்கள். அந்த மேலாதிக்கத்த மனோநிலையில் தமிழர்களை வென்றுவிட்டதாக அவர்கள் குதூகலித்திருந்தாலும், உண்மையில் தோற்றுப்போனவர்கள் அவர்கள்தான் என்பதை காலம் எடுத்துரைத்திருக்கின்றது.

பொருளாதார நெருக்கடி இந்தத் தீவின் தமிழ்த் தேசத்தையும் பாதித்திருக்கின்றதுதான். அதை மறுக்க முடியாது. சிங்கள தேசத்து ஆட்சியாளர்களால் தமிழர் தேசம் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்குள்ளும் வாழ்ந்து வந்தவர்கள் நாம்.

ஆனாலும் இப்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை சங்கீதக் கதிரை போன்று மாற்றுவதற்கு முயலும் தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் பின்புலத்துடன் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நாம் ஆதரிப்பது தீர்வாகாது.

நாம் எமது முன்னைய சுய பொருளாதாரத்துக்கு திரும்புவதே தற்போதைய நெருக்கடியிலிருந்து தமிழர் தேசம் மீள்வதற்கான வழி. அதை எம்மவர்கள் செய்து கொண்டும்தான் இருக்கின்றார்கள். தென்னிலங்கை போராட்டக்களம் தமிழர்களுக்கு தேவையற்றது. கொழும்பு மனோநிலை உடைய தமிழர்கள், தங்களது நித்திய வாழ்வாதாரத்துக்காக சிங்களவர்களுடன் போராட்டத்தில் இணைகின்றனர். ஆனால், தமிழர்கள் திரளாக ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

ஆட்சியாளர்களை மாற்றித் தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக அடிப்படைக் கட்டமைப்பை மாற்றக் கோருவதுடன், மகாவம்ச புனைவுகளிலிருந்து மீளத் தயாராகும்போதே தமிழர்கள் கை கொடுப்பது காலப் பொருத்தமாக இருக்கும். இல்லாவிடின் நல்லாட்சி காலத்தில் கறிவேப்பில்லையான கதையாகவே தமிழர்களின் நிலை அமையும் – என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version