இலங்கை

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி மாற்றியமைக்கப்பட வேண்டும்! – மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

Published

on

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி நிலை மாற்றியமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய இன்று காலை காங்கேசன்துறையில் உள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திற்கு இன்று சந்தோஷமான நாளாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் சமாதானத்தை ஏற்படுத்த இலங்கை பொலிஸார் என்ற அடிப்படையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த கடமையினை சரிவர செய்வேன் என உறுதி கூறுகின்றேன்.

அத்தோடு வடக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான விடயங்களை பொலிஸார் என்ற ரீதியில் எங்களால் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செயற்படுத்த முயற்சி செய்யவுள்ளேன்.
அதற்குரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அத்துடன் வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி நிலையினை மாற்றி அமைக்க வேண்டும். அந்த இடைவெளி நிலையினை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்துவது கட்டாயமாக செய்யப்பட வேண்டிய விடயம். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் இந்த விடயங்களை நான் மேற் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்

அத்தோடு வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸாரின் தேவைகள் குறிப்பாக சில இடங்களில் பொலிஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டடங்கள் இல்லை. பொதுமக்களின் காணிகளில் பொலிஸ் நிலையங்கள் இயங்குகின்றன.

அவ்வாறான நிலையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும். குறிப்பாக பொலிஸாருக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள், கட்டடம், மின்சாரம் மற்றும் ஏனைய வசதிகளை பொலிஸ் தலைமை காரியாலயத்துடன் இணைந்து பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என்ற பொறுப்பு என்னிடம் பொலிஸ்மா அதிபரால் கையளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பினை நான் நிறைவேற்றி வடக்கில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையும் சிறந்த வாழ்க்கையையும் முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருப்பேன்.

அத்தோடு பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய சகல விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு தயாராக உள்ளேன்.

குறிப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர், விவசாயத்துறையில் ஈடுபடுவோர், கல்விச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் பொலிஸாராகிய நாம் பூரண ஒத்துழைப்பினை வடக்கு மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம் – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version