இலங்கை

வாழ்நாள் பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரன் மறைவு!

Published

on

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற இரசாயனவியல் பேராசிரியரும், இரசாயனவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவருமாகிய பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரன் கடந்த 17 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை லண்டனில் காலமானார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது விஞ்ஞானமானி (சிறப்புப்) பட்டத்தை 1968 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்த பின்னர் 1972 இல் பிரித்தானியா ஷெஃவீல்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றார்.

1976 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் துறையில் விரிவுரையாளராக இணைந்து கொண்ட திருமதி மகேஸ்வரன் இத்துறையைக் கட்டியெழுப்புவதில் அரும்பணியாற்றி 1986 இல் பேராசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டு 1993 இல் சிரேஷ்ட பேராசிரியரானார்.

தமிழர் தாயகத்தின் மிகவும் சவாலான காலப்பகுதிகளில் துறைத்தலைவராகப் பலமுறைப் பணியாற்றி இரசாயனவியல் கல்வியின் தரத்தை உரிய முறையில் பேணியவர்.

தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இருந்த சமயத்தில் அதன் முதல்வராக 2003 தொடக்கம் 2006 வரை கடமையாற்றியுள்ளார்.

2010 இல் பல்கலைக்கழக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின் இலண்டனில் வசித்து வந்த பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரன் கடந்த 17 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை அன்று காலை காலமானார்.

இவரது சேவையைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2010 இல் இவருக்கு தகசார் பேராசிரியர் பதவியை வழங்கி கௌரவித்திருந்தது. பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரனும் அவரது கணவரான அமரர் பேராசிரியர் சி. மகேஸ்வரனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் சேவை ஆற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version