அரசியல்
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்! – ஜெய்சங்கருக்கு வெங்கடேசன் கடிதம்
தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென தமிழக மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, உச்சத்தை தொட்டுள்ள பணவீக்கம் காரணமாக தமிழ் மக்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளதாக தமிழக மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கூறியுள்ளார்.
நாளாந்தம் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக செய்திகள் வௌிவருவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிய அரசு இரண்டு விடயங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர், அத்தியாவசியப் பொருட்களை அங்குள்ள தமிழ் மக்களுக்கு இந்தியத் தூதரகம் மூலம் வழங்க ஒன்றிய அரசின் அனுமதியை நாடி வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், ஒன்றிய அரசு தாமதமின்றி அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மக்களவை உறுப்பினர் கோரியுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் வந்து தஞ்சம் புகும் மக்களுக்கு தங்குமிடம், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதை உடனடியாக உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமிழக மக்களவை உறுப்பினர் வெங்கடேசனின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளுக்கான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக மேற்கொள்வார் எனத் தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
#SriLanka&IndianNews
You must be logged in to post a comment Login