இலங்கை
21 விமானங்களைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்ளத் திட்டம்!
தமது நீண்டகால வர்த்தக மூலோபாயத்திற்கு அமைவாக, 21 விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான 4 முன்மொழிவுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிற்குள் தமது விமான நிறுவனத்திற்கான விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிப்பதே தமது திட்டமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 21 விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தற்போது நீக்கப்பட்டுள்ள A 320 மற்றும் 330 ஆகிய இரண்டு விமானங்களுக்கு பதிலாக விமானங்களை பெற்றுக்கொள்வதற்கான 02 முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிதாக விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக மேலும் 2 முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகைக்கு பெறப்படவுள்ள விமானங்களில் 60 வீதமானவற்றை, நிறுவன பாவனையிலிருந்து நீக்கப்பட்ட விமானங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாத் தொற்று காலப்பகுதியில் சேவையிலிருந்து 3 விமானங்களை நீக்கியதாக தெரிவித்துள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், 25 நாடுகளுக்கான 40 விமான சேவைகளை வழங்குவதற்கு 24 விமானங்களே உள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login