அரசியல்
அரசுக்கு எதிரான பிரேரணை: இ.தொ.கா. நடுநிலையாம்!
அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசின் பங்காளியாகவிருந்து பின்னர் இராஜாங்க அமைச்சுப் பதவியை துறந்து வெளியேறிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி வருகின்ற நிலையிலேயே எதிர்க்கட்சியினர் அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமாத்திரமன்றி நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு கட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து விலகிய போதிலும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் நடுநிலையாகச் செயற்படப் போவதாக அறிவித்திருக்கின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இந்த அறிவிப்பானது மலையகத்தில் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.
அரசில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கடந்த வாரத்தில் இராஜாங்க அமைச்சுப் பதவியையும் இராஜிநாமா செய்திருந்தார். இந்நிலையில், நாட்டு மக்களும் அதேநேரம் இளைஞர்களும், யுவதிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அவரது தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து பதவி விலகிச் செல்லுமாறு கூறி வருகின்ற நிலையில் எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருக்கையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்திருப்பது அரசுக்கு ஆதரவை வழங்குவதாக அமைந்திருக்கின்றது என மலையக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login