இலங்கை

யாழ். பல்கலை மருத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் இயற்கை எய்தினார்!!

Published

on

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் இயற்கை எய்தினார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிர் இரசாயனவியல் துறையின் விரிவுரையாளராக இணைந்து கொண்ட இவர், மூத்த விரிவுரையாளராக கடமையாற்றிய அதே வேளை 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பீடத்தின் 9 ஆவது பீடாதிபதியாகப் பதவி வகித்தார்.

இவர் பீடாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மருத்துவ பீடத்துக்கென அதி நவீன வசதிகளைக் கொண்ட ஹூவர் கலையரங்கம் 2014 ஆம் ஆண்டு சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதுடன், அதே ஆண்டில் மருத்துவ பீட பரீட்சை மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அண்மையாக அமைக்கப்பட்டுவரும் ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடத்துக்கான காணியை நன்கொடையாகப் பெற்றுக் கொடுப்பதில் இவர் பெரும் பங்காற்றியிருந்தார்.

கற்பித்தல் நடவடிக்கைகளுக்கப்பால் மாணவர்களைச் சிறந்த முறையில் வழிகாட்டுவதிலும், அதனது நிர்வாகத் திறனினூடாக மருத்துவ பீடத்தைத் தரமுயர்த்துவதிலும் பெரும் பங்காற்றி இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு இவருக்குத் திறமை அடிப்படையில் உயர் இரசாயனவியலில் பேராசிரியராகப் பதவியுயர்வு வழங்கப்பட்டது.

இவரது மறைவு மருத்துவத் துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், மருத்துவ பீடாதிபதி, முன்னாள் பீடாதிபதிகள், மருத்துவ பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் இவரது மறைவு குறித்துத் தமது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version