அரசியல்

குதிரை பேரமும், கட்சி தாவும் படலமும் ஆரம்பம்!

Published

on

இலங்கையில் ஒரு புறத்தில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில் – மறுபுறத்தில் குதிரை பேரமும், கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவாரென அறிவிப்பு விடுத்த, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியன் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை, ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வளைத்துபோட்டுள்ளது.

அவருக்கு விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ்ப்பாணம் உட்பட சில மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலும் களமிறங்கியது. அக்கட்சியின் சார்பில் 14 பேர் நாடாளுமன்றம் தெரிவாகினர். அங்கஜன் மட்டுமே சு.கவின் சார்பில் சபைக்கு வந்தார். ஏனையோர் மொட்டு சின்னத்தில்தான் சபைக்கு தெரிவாகினர்.

அரச பங்காளிக்கட்சியாக செயற்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடந்த 5 ஆம் திகதி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது.கட்சியின் 14 எம்.பிக்களும் சபையில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என்ற அறிவிப்பும் விடுக்கப்பட்டது.

1.மைத்திரிபால சிறிசேன
2.நிமல் சிறிபாலடி சில்வா
3.மஹிந்த அமரவீர
4.தயாசிறி ஜயசேகர
5.துமிந்த திஸாநாயக்க
6.லசந்த அழகியவன்ன
7.ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
8.ஜகத் புஷ்பகுமார
9.ஷான் விஜேலால்
10.சாந்த பண்டார
11.துஷ்மந்த மித்ரபால
12.சுரேன் ராகவன்
13 .அங்கஜன் ராமநாதன்
14.சம்பத் தஸநாயக்க

இந்நிலையிலேயே 14 பேர் அணியில் இடம்பெற்ற ஒருவர் தற்போது அரசுக்கு ஆதரவை தெரிவித்து, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுள்ளார். ராஜபக்ச குடும்ப உறுப்பினரான சசீந்திர ராஜபக்ச பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே சாந்த பண்டார உள்வாங்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜயரத்னவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்கவில்லை. எனவே, அவரும் அரசு பக்கம் சாயக்கூடும்.

சுதந்திரக்கட்சியின் 14 பேர், இ.தொ.காவின் இருவர் உட்பட நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக 42 பேர் கடந்த 5 ஆம் திகதி அறிவித்திருந்தனர். இதனால் அரசின் சாதாரணப் பெரும்பான்மைகூட ஆட்டம் காணும் மட்டத்தில் இருந்தது.

அதேவேளை, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையிலேயே தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஆளுங்கட்சியின் தீவிரம் காட்டிவருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version