அரசியல்

மக்கள் எழுச்சிக்கு அஞ்சியே ஊரடங்கு உத்தரவு!- பழனி திகாம்பரம்

Published

on

” மக்கள் எழுச்சிக்கு அஞ்சி அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலையில் நாளை (03) நடைபெறவிருந்த போராட்டம் பிற்போடப்படுகின்றது.  எனினும், எதிர்வரும் 10 ஆம் திகதி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இன்று (02.4.2022) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்குகூட கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு வரிசையில் காத்துகிடக்க வேண்டியுள்ளது.

இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டை ஆளக்கூடியவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும் தலவாக்கலையில் நாளை (03) போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. இதில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்கவிருந்தனர். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

எனினும், மக்கள் எழுச்சிக்கு அஞ்சி, போராட்டங்களை தடுக்கும் நோக்கில் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எனவே, நாளை இடம்பெறவிருந்த போராட்டம், அடுத்த ஞாயிற்றுக்கிழமை 10 ஆம் திகதிவரை பிற்போடப்படுகின்றது. அன்றைய தினம் உணர்வுபூர்வமாக பங்கேற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிறகு நெருக்கடிகள் தலைவிரித்தாடுகின்றன. 13 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. இந்நிலைமை நீடித்தால் தேயிலை தோட்டங்களையும் மூடவேண்டிவரலாம். எனவே, இந்த ராஜபக்ச குடும்ப ஆட்சியை விரட்ட வேண்டும். புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version