அரசியல்
அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறாது! – மருதபாண்டி அறிவிப்பு
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் சிறந்த நல்லுறவு இருக்கின்றது. எனவே, அரசிலிருந்து வெளியேற வேண்டிய தேவையில்லை. அரசில் இருந்தபடியே மக்களுக்காகப் போராடும் தைரியம் காங்கிரஸுக்கு இருக்கின்றது.”
– இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
நுவரெலியா – நானுஓயா பிரதேச சபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் தனியான கொள்கையுடன் செயற்படும் கட்சியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகும்.
சர்வகட்சி மாநாட்டில் எமது கட்சி ஏன் பங்கேற்கவில்லை என்பது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் விரிவாக விளக்கமளித்துள்ளார். நாம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்; அவை நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான ஒரு நகர்வாககூட இது இருக்கலாம்.
அரசு மீது இ.தொ.கா. அதிருப்தியில் உள்ளது என எதிரணிதான் பிரசாரம் முன்னெடுத்து வருகின்றது. எம்மிடையே சிறந்த நல்லுறவு இருக்கின்றது. எவ்வித பிளவும், பிரச்சினையும் இல்லை. அரசுக்குள் இருந்துகொண்டு, எப்படிப் போராடி மக்கள் உரிமைகளை பெறவேண்டும் என்பது எமக்குத் தெரியும்” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login