அரசியல்

‘அரசியல் போர் உக்கிரம்’ – ஆட்டம் காணுமா மொட்டு அரசு?

Published

on

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ‘மொட்டு’ அரசின் சாதாரண பெரும்பான்மையும் (113 ஆசனங்கள்) விரைவில் இல்லாது செய்யப்பட்டு – இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவருமான விமல் வீரவன்ச இன்று (24.03.2022) சூளுரைத்துள்ளார்.

அத்துடன், பஸில் ராஜபக்சவின் அரசியல் வாழ்வுக்கு முடிவுகட்டிவிட்டு, நாமல் ராஜபக்சவை முன்னிலைப்படுத்துவதற்கான ‘அரசியல் நாடகத்தையே’ 11 கட்சிகள் அரங்கேற்றிவருகின்றன என எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் அடியோடு நிராகரித்தார்.

” எந்தவொரு ராஜபக்சக்களுக்காகவும் சோரம் போக தயாரில்லை.” – எனவும் விமல் பகிரங்கமாக அறிவிப்பு விடுத்தார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில உட்பட ’11 கட்சிகள் அணி’ யின் பிரதிநிதிகள் இன்று கண்டிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

மகாநாயக்க தேரர்களை சந்தித்து, ஆசி பெற்றதுடன், சமகால நிலைவரம் பற்றியும் உரையாடினர். இதன்போது ‘முழு நாடும் சரியான பாதைக்கு’ எனும் தமது அணியின் வேலைத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் பற்றி மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே, ” ஆணவ போக்கில் செயற்படும் – அசிங்கமான அமெரிக்கரான பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக செயற்படும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.” – என்ற அறிவிப்பை விமல் விடுத்தார்.

2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது, கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலேயே எதிர்கொண்டது. தேசிய ரீதியில் 59.09 சதவீத வாக்குகளைப்பெற்ற அக்கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் உட்பட 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

பங்காளிக்கட்சிகளின் ஆதரவு கிட்டியது. அதன்பின்னர் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள், அரவிந்தகுமார், டயானா போன்றவர்களும் அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர். இதனால் நாடாளுமன்றத்தில் 160 ஆசனங்கள் அரச வகம் இருந்தன. அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை (150) விஞ்சிய ஆதரவு.

எனினும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையால் அரசு விசேட பெரும்பான்மையை இழந்துவிட்டது.

சுதந்திரக்கட்சியும் காலைவாரும் நிலையிலேயே உள்ளது. சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச ,சந்திம வீரக்கொடி, விதுர விக்ரமநாயக்க, பிரேமநாத் தொலவத்த ஆகியோருக்கும் அரசுடன் நல்லுறவு இல்லை. சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்து இ.தொ.காவும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

எனவே, மொட்டு கட்சிக்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான சாதாரண பெரும்பான்மை ( 113 ஆசனங்கள்) ஆதரவு கூட ஊசலாடுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விமல் தரப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மைகூட நிலையாக இல்லாவிட்டால் ஆட்சியை முறையாக முன்னெடுக்க முடியாது. அரசியல் ஸ்தீரமற்ற தன்மை உருவாகும். அது வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையலாம்.

எனவே, அரசியல் நெருக்கடியை தவிர்க்க தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கு அரச தலைமை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘விமல்’ தரப்பினரால் தனித்து ‘அரசியல் போர்’ தொடுத்து இந்த அரசை ஆட்டம் காண வைப்பது கடினம். அதற்காக கடுமையாக போராடவேண்டிவரும். எனவே, பிரதான எதிரணிகளுடன் சங்கமித்து போரை முன்னெடுத்தால் இலகுவில் இலக்கை அடையலாம்.

ஆனால், எதிரணிகள் மற்றும் விமல் தரப்புகளின் இணைவு என்பது இழுபறியில் இருக்கும் ஒன்று. அது சாத்தியப்படுமா என்பதும் சந்தேகமே. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதுபோல – பிரதான எதிரியை வீழ்த்த ‘தற்காலிக’ சங்கமத்துக்கு சாத்தியம் இல்லாமலும் இல்லை.

11 அணியின் மூலம் அரசின் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை இலகுவில் இலக்கு வைக்கலாம் என்பதால் மேற்படி தரப்பை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பதும் அரசியல் இராஜதந்திரம் அல்லவென சுட்டிக்காட்டப்படுகின்றது .

ஆர்.சனத்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version