அரசியல்
நெருக்கடிக்கு தீர்வுகாண ஒன்றிணைவோம்! – சர்வகட்சி மாநாட்டில் கோட்டா அழைப்பு
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்
ஜனாதிபதி மாளிகையில், சர்வகட்சி மாநாட்டை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்த்து இந்த மாநாடு கூட்டப்பட்டது. கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் சர்வகட்சி மாநாட்டுக்கு எதிர்காலத்தில் வழங்குவதாகவும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தற்போதைய பொருளாதார நிலைமையை மாநாட்டில் முன்வைத்தார்.
சர்வகட்சி மாநாடு நேர்மையான ஒரு முயற்சி ஆகும். இதில் எந்தவித அரசியல் இலாபமோ குறுகிய நோக்கமோ கிடையாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசின் அழைப்பை ஏற்றதுடன், அதனைத் தேசிய தேவையாகக் கருதி பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். கலந்துகொள்ளாத ஏனைய கட்சிகளுக்கும் வருகை தந்து, தமது நிலைப்பாட்டை சர்வகட்சி மாநாட்டின் முன்னிலையில் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மீளாய்வு செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்கி பயனுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை அமைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login