அரசியல்

பிரதமரின் நல்லூர் விஜயம்! – ஆலய முன்றலில் போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் நாளைய தினம் காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஆகியன இணைந்து இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்போதே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எங்களுடைய நிலத்திலே வந்து தமிழினத்துக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாட்டுக்கு வருவதாக ஏற்பாடாகி இருக்கின்றது. தமிழின அழிப்பை மேற்கொண்டிருக்ககூடிய மஹிந்த ராஜபக்ச எங்களுடைய மண்ணுக்கு வருவதை முற்றுமாக எதிர்க்கின்றோம்.

இதற்காக நாளை காலை 10 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் எங்களுடைய உறவுகள் எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒன்று கூடுமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இன்றைய இந்த காலகட்டத்தில் மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலேயே எங்களுடைய மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கு பகுதியிலேயே காணி அபகரிப்புகள் மிகவும் ரகசியமாக வேகமாக நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் திணைக்களம் வன இலாகா திணைக்களம் என அனைத்துமே மக்களுடைய காணிகளை அபகரிப்பு வருகின்றது.

எங்களுடைய காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கின்ற திட்டம் இடம்பெற்று வருகின்றன. பௌத்தமயமாக்கல் என்ற திட்டத்தில் இன்றும்கூட கந்தரோடையில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏற்பாடாகி இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு இடங்களிலும் விகாரைகளை அமைத்து தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த வழிபாட்டு இடங்கள் எல்லாம் பௌத்த மதஸ்தலங்களாக மாற்றி எடுக்கின்ற முயற்சிகளை ஏற்க முடியாது.

தென்னிலங்கையிலே எங்கு சென்றாலும் எதிர்ப்பு இருக்கக் கூடிய சூழலில் எங்கும் போக முடியாமல் எங்களிடம் வந்து தஞ்சம் புகுந்து அரசியல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 13 வருடங்களில் தொட்டுக்கொண்டு இருக்க கூடிய நிலையில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இன அழிப்புக்கு எந்த நீதியையும் வழங்காமல் எங்களையும் அனைவரையும் சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டு இப்படி ஒரு இனப்படுகொலையை செய்திருக்கக்கூடிய அரசியல்வாதி எங்களுடைய நிலத்தில் காலடி எடுத்து வைக்க முடியாது. அனைத்து மக்களும் இதனை உணர்ந்து இந்த எதிர்ப்பை வெளியிட வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், மாணவர் அமைப்புகள் மகளிர் அமைப்புகள், பாதிக்கப்பட்ட தரப்புகள், பொதுமக்கள், இளைஞர் மன்றங்கள் என அனைத்து தரப்பினரும் நாளைய தினம் காலை 10 மணியளவில் நல்லூர் முன்றலில் ஒன்றுகூடி ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டவேண்டும்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி நிற்கின்றது- என்றார்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version