இலங்கை

உள்ளாட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பு: ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்டுள்ள சாவு மணி!!

Published

on

உள்ளாட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பானது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்டுள்ள சாவு மணியாகும். எனவே, தேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

” பழையன கழிதலும், புதியன பகுதலும் என்பதற்கிணங்க, பழைய அரசை வீட்டுக்கு அனுப்பி, புதியதொரு ஆட்சியை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும்.

இதற்காக தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் ஓரணியில் திரள வேண்டும். தேர்தல் வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை, தற்போதிலிருந்தே நாம் நடவடிக்கையில் இறங்கவேண்டும். நிகழ்ச்சி நிரலை தயாரிக்க வேண்டும்.

நாட்டு மக்கள் இன்று எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எம்மை பொறுத்தவரையில் இந்த அரசு வீட்டுக்கு சென்றால்தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வழி பிறக்கும்.

அதேவேளை, உள்ளாட்சி சபைகளின் பதவி காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாகும். உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதையும் நாம் கண்டிக்கின்றோம். அது எந்த அரசாக இருந்தாலும் பரவாயில்லை.

அரச ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. அந்த கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும் சூழ்நிலை இல்லை.

தோட்டக்கம்பனிகள் கைவிரிக்கும் நிலையிலேயே உள்ளன. எனவே, அம்மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசு முன்வரவேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version