இலங்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!

Published

on

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்றைய தினம் (07) காலை குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மாதகல் பிரதேசத்தின் 7 மீனவர் சங்கங்கள் இணைந்து நடைபவனியாக வந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு மானிப்பாய் பொலிசாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

2500 இந்திய இழுவைமடி தொழிலை நிறுத்தும் வரை போராடுவோம், இந்திய அரசு வடக்கு மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோருகிறோம்.

எமது கடல் வளத்தையும் வாழ்வாதாரத்தையும் , பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் போன்ற கோஷங்களை முன்வைத்தே போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது, மானிப்பாய் பொலிசார் குறித்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்களை விலகிச்செல்லுமாறும், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இருப்பினும், எமது பிரதேசத்தில் அரை கிலோமீற்றரில் வந்து அயல் நாட்டவன் மீன்பிடிக்கும் போது, அந்த மீன்பிடி நடவடிக்கையினை தடுக்குமாறு கூறினால், உங்களால் வரமுடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தமது ஆதங்கக் கருத்தினை வெளியிட்டிருந்தனர்.

மேலும், பொலிஸார் கைது செய்ய முடியுமென்று தெரிவித்த நிலையில், கொதித்தெழுந்த மக்கள் வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டமையைத் தொடர்ந்து, மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மக்களுடன் சமரசம் பேச முயன்றும் பயனளிக்கவில்லை.

பின்னர் ஒருவாறாக சமாதானமான மக்கள் பொலிஸ் நிலைய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் குறித்த மக்களுடன் கலந்துரையாடி மகஜர் ஒன்றையும் பெற்றுச்சென்றார்.

சுமார் ஒரு மணி நேரம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்த பின்னர் , உதவி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்த பின்னர் , தமது போராட்டத்தினை முடிவுறுத்தினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாதகலைச் சேர்ந்த 7 கடற்றொழில் சங்க மக்கள், யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் தலைவர் அன்னராசா, வடமாகாண கடற்றொழில் சாமச தலைவர் சுப்பிரமணியம், வலிதென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் , உறுப்பினர்கள் ஜோன் ஜிப்ரிக்கோ , றமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version