இலங்கை

மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை

Published

on

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களைப் பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

நூற்றுக்கணக்கான படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதலின் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம், மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான சில பதாதைகள், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ அதிகாரியால் எழுத்து மூல ஆவணம் ஒன்று பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அன்றைய தினம் முன்னிரவு யாழ்ப்பாணம் நீதிவானின் இல்லத்தில் மாணவர்கள் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உப விதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பட்டயம் ஆகிய நான்கு ஏற்பாடுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அதனால் மாணவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுகளில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும் பிணை வழங்கக் கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு கோப்பாய் பொலிஸாருக்கு சட்ட மா அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் 13 நாள்களின் பின்னர் மே 16ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சுமார் 30 மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் 2019 மே 3ஆம் திகதி நடத்திய தேடுதலில் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலையில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிருந்தமையை அடுத்து சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கைது செய்யப்பட்டார்.

அவர் 12 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மீதான வழக்கு பொலிஸாரினால் மீளப்பெறப்பட்டது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version