இலங்கை

தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் உடனடியாகப் பதவி விலகுங்கள்-மனோ

Published

on

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும்.”- என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து? எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு.

ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை கேபினட் அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு.

அமைச்சர்கள் அலி சப்றி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.

இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். இவர் மீது சட்டம் பாயாது.

ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது. இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது.

ஆகவே, இவரது செயலணியின் பெயரை “ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்” என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்த செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன். ” – என்றுள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version