இலங்கை

13 இன் ஊடாக அதிகார பகிர்வு – த.தே.கூட்டமைப்பிடம் ஹர்சவர்தன் தெரிவிப்பு

Published

on

நாட்டில் 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முழுமையாக அதிகாரப் பகிர்வை நோக்கி செல்லவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்சர்தன் ஸ்ரீங்லா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் இல்லத்தில் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன் போது இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டுள்ளார்.

தமிழ் மக்களது நீண்ட எதிர்பார்ப்புக்கள், அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம், இந்தியா வலியுறுத்தியுள்ள அதே நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் டெல்லியில் விரைவில் பேச்சுக்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் பிரதமர், நிதியமைச்சர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் முன்னெடுத்து பேச்சு வார்த்தைகள் குறித்தும் இந்திய வெளிவிவகார செயலாளர் கலந்தரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,

அரசியல் தீர்வு குறித்தே முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டுள்ளது, குறிப்பாக 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் மாகாணசபை தேர்தலை உடன் நடத்துவது குறித்து வெளிப்படையாக கருத்துக்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

குறிப்பாக 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் அதன் ஊடக முழுமையாக அதிகார பகிர்வை நோக்கி செல்வதும், நாட்டில் தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற இதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரப் பகிர்வின் மூலமாக அர்த்தமுள்ள நகர்வொன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இந்தியாவின் சார்பில் இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம்.

அதேபோல் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து அரசிடம் வலியுறுத்தியதாக எம்மிடம் தெரிவித்துள்ளார். எனினும் மாகாணசபை தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல்கள் உள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறியுள்ளார் எனவும், அவ்வாறு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதையும் எங்களிடத்தில் கேட்டார். சட்ட சிக்கல்கள் இல்லை என்பதை அவருக்கு நாம் தெளிவுபடுத்தினோம். அவற்றை விபரமாக கேட்டறிந்து கொண்டார்.

மேலும் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளை வெற்றிகொள்ள இந்தியாவின் முழுமையான பங்களிப்பு இருப்பதுடன் இந்த நகர்வுகளை முன்னெடுப்பதில் இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்பதை எம்மிடம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இந்தியாவின் ஆர்வமும், ஆதிக்கமும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதாகவும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஏற்கனவே இந்தியா முன்னெடுத்துள்ள திட்டங்களை அவ்வாறே முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

விரைவில் மீண்டும் சந்திப்பதாகவும், அது குறித்த சந்திப்பு திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் எம்மிடத்தில் கூறியுள்ளார். அதற்கமைய விரைவில் டெல்லியில் சந்திப்புகள் இடம்பெறும் என்பதையும் அவர் தெரிவித்தார் சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version