இலங்கை

இனப் பிரச்சினைக்கு நீதியான தீர்வுகள் அவசியம் – ஜெய்சங்கர் சுட்டிக்காட்டு

Published

on

இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளதும் நலன்கருதி இனப் பிரச்சினைக்கு பின் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் நீதியான தீர்வுகள் அவசியம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஒரு பிரச்சினைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது எனவும், அதுவே இரண்டு நாடுகளுக்கு நன்மை பயக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார்.

அத்துடன் இரு நாடுகளினதும் நலன் கருதி, இனப் பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் நீதியான தீர்வுகள் அவசியம் என அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகையில்,

பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது, கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சினைகளில் இலங்கை அரசு முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும்போது, வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரைவுபடுத்தும் முகமாக, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு அமைச்சர்களும் இதன்போது இணக்கம் வெளியிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version