இலங்கை
கஜேந்திரன் எம்பி கைது அரசின் கோரமுகத்தின் வெளிப்பாடே!– சிறீதரன் எம்.பி. சீற்றம்
தமிழின விடுதலைக்கு தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலிக்க முற்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தமையானது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
தன் இனத்துக்காக உயிர்த் தியாகம் செய்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக ஆயுதமுனையில் அதியுச்ச வன்முறைப் பிரயோகங்களோடு கைதுசெய்யப்பட்டுள்ளமையானது இந்த அரசின் இன்னொரு கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த ஜனநாயக நாட்டில் இத்தகைய மோசமான அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமையானது சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை தெட்டத்தெளிவாக காண்பித்துள்ளது.
நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செய்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை ஒரு குற்றவாளியைப் போல் வலுக்கட்டாயமாக பொலிஸார் கைதுசெய்தமைக்கு எனது வலுவான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login