இந்தியா

காசு இருந்தா தான் டாக்டராக முடியுமா! நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் நண்பன் உருக்கம்

Published

on

காசு இருந்தா தான் டாக்டராக முடியுமா! நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் நண்பன் உருக்கம்

தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் நண்பன் நீட் தேர்வை விமர்சித்து உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சோகம் தாங்க முடியாமல் அவரது தந்தை செல்வசேகர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகதீஸ்வரன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

ஜெகதீஸ்வரனின் நண்பன் அளித்த பேட்டியில், “நான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் தான் எடுத்தேன். என் தந்தை வசதியாக இருந்ததால் ரூ.25 லட்சம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்த்துள்ளார். இது தான் இங்கு இருக்கும் பிரச்னை.

காசு இருப்பவன் தான் டாக்டராக முடியம் என்றால் அவன் டாக்டர் ஆனதும் காசை எடுக்க பார்ப்பானா, இல்லை மக்களுக்கு சேவை செய்வானா? நீட் தேர்வு தான் உண்மையான மருத்துவர்களை உருவாக்கியது என்றால் இப்போது இருக்கும் டாக்டர்கள் எல்லாம் டுபாக்கூர் என்று சொல்கிறீர்களா?” என்றார்.

மேலும் பேசிய மாணவன், “என் நண்பன் ஜெகதீஸ்வரன் என்னை விட நன்றாக படிப்பவன். ஆனாலும், அவனால் மருத்துவராக முடியவில்லை. அது தான் எனக்கு வருத்தமாக உள்ளது. நீட் தேர்வை வைத்து மத்திய அரசு என்ன சாதிக்க போகிறது.

என் நண்பன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே நீட் தேர்வை எழுதினான். அவன் உயிரிழந்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 2 முறை நீட் தேர்வு எழுதி கிடைக்காததால் 3 ஆவது முறை அப்பாவுக்காக டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

வெளிநாடு கல்லூரிகளில் இருந்து ஜெகதீஸ்வரனுக்கு அழைப்பு வந்தது. ஆனால், அவன் போகவில்லை. இரு தினங்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து மச்சான் நீ மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறினான்.

என் அப்பாவிடம் காசு இருந்த ஒரே காரணத்தால் நான் மருத்துவரானேன். நான் இதற்கு தகுதியானவன் இல்லை. ஜெகதீஸ்வரன் போன்ற மக்களுக்கு சேவை செய்கிற எண்ணம் கொண்டவர்கள் தான் இதற்கு தகுதியானவர்கள்.

தனியார் பள்ளிகளில் படித்த எங்களுக்கே இதனை எதிர்கொள்ள முடியவில்லை. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள் மருத்துவ படிப்பிற்கே கோடிக்கணக்கில் செலவு செய்தால், மருத்துவரான பின்பு அவன் போட்ட காசை எடுக்க தானே பார்ப்பான். பிறகு எப்படி சுகாதார கட்டமைப்பு சீராக இருக்கும்” என்று கண்ணீர் மல்க மாணவன் பேசியுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version