இந்தியா

இஸ்லாமியர், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? சீமான் அதிரடி!

Published

on

இஸ்லாமியர், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? சீமான் அதிரடி!

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் கூறியது சர்ச்சையான நிலையில், மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய மாநிலம் மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு எதிராக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது,”மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசினால் இங்குள்ள கிறிஸ்துவர்கள் ஒட்டு போடுவதில்லை. இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேவாலயத்திற்கு சென்றுவிட்டு தேவனே வாரீர், வாரீர்ன்னு பாடிவிட்டு நாட்டை யாரிடமோ கொடுத்து விட்டார்கள்.

இந்த நாட்டில் நடக்கும் அநீதிக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான் பொறுப்பு. திமுகவிற்கும், காங்கிரசுக்கும் ஓட்டு போட்டு விட்டு தெருவில் விட்டுள்ளனர்” என்றார்.

இந்நிலையில், சீமானுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும், கிருஸ்துவ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முகமது இதிரீஸ், செயலர் சித்திக் உள்ளிட்டோர் சீமான் மீது புகார் அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கையும் எழுந்து வருகின்றன.

இதனிடையே நடிகர் ராஜ்கிரண், “இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் தலைவர் நபிகள் நாயகம் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமை காக்கிறோம். இந்த பொறுமையை தவறாக புரிந்து கொண்டு கண்டவர்கள் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,”அநீதிக்கு எதிராக என்றைக்காவது இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் போராடியது உண்டா? இஸ்லாமியர்களிடம் நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர்,”இஸ்லாமியர்களுக்காக நடிகர் ராஜ்கிரண் எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் திமுக செய்த ஒரு நன்மையை சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்து விட்டு போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன். ஆனால், இனி சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லிவிட்டாரே என்று கூறிக்கொண்டே தான் இருப்பார்கள்” என்றார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version