இந்தியா

அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

Published

on

பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். 2-வது நாளான நேற்று அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் காத்திருந்து பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜோ பைடன், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க பாராளுமன்றத்துக்கு சென்றார். அவரை அமெரிக்க எம்.பி.க்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். அவர்கள் வரவேற்பை மோடி முகத்தில் புன்னகை தவழ ஏற்றுக்கொண்டார்.

பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- 140 கோடி இந்தியர்களின் சார்பில் இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்து உள்ளது மிகப்பெரிய கவுரவம் ஆகும். அதுவும் இந்த அவையில் 2-வது முறையாக உரையாற்றுவது எனக்கு பெருமையாக உள்ளது. இந்திய-அமெரிக்க மரபணு மற்றும் ரத்தத்தில் ஜனநாயகம் சேர்ந்தே உள்ளது. இந்த ஜனநாயகம் தான் மக்களை ஒன்றிணைக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ரீதியிலான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இரு நாடுகளுக்கும் முதன்மையானது ஜனநாயகம். இதன் அடிப்படையில் தான் அரசியலமைப்பு உள்ளது.

இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கே இட மில்லை. சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகை பாதுகாக்க பாடுபடுகிறோம். இது இந்தியா-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஆகும். உலகிலேயே அதிக பெண் விஞ்ஞானிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தான் இந்திய குடியரசு தலைவராக உள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு 85 கோடி மக்களுக்கு கிடைத்து உள்ளது. அனைத்து வகையான தொழில் நுட்பங்களையும் இந்திய மக்கள் சிறப்பான முறையில் கையாண்டு வருகின்றனர். பெண்களின் கல்வி அறிவு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.

இந்தியா வளர்ந்தால் தான் உலகம் வளரும். இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு ஏற்பட இரு நாடுகளும் முன்னுரிமை அளித்து வருகிறது. மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம் தான். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம். பயங்கரவாதத்தை ஒழிக்க 2 நாடுகளும் தோளோடு தோள் சேர்ந்து தீவிரமாக உழைத்து வருகிறது. இன்று இந்தியாவும், அமெரிக்காவும் விண்வெளியிலும், கடலிலும், அறிவியல், கலை மற்றும் ஸ்டாட்அப், வர்த்தகம், விவசாயம் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இணைந்து செயல்படுகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் முக்கிய வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மனித துன்பங்களை தடுக்க நாம் அனைவரும் முடிந்ததை செய்ய வேண்டும். உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பாராளுமன்றத்தில் மோடியின் பேச்சை எம்.பி.க்கள் ஆர்வத்துடனும், கரவொலி எழுப்பியும் உற்சாகத்துடன் கேட்டனர்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version