இந்தியா

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு, ரூ.2 கோடி வரி நிலுவை!!

Published

on

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் முறையாக சொத்து வரி மற்றும் குடிநீர் செலுத்தவில்லை என கூறி ஆக்ரா மாநகராட்சி சார்பில் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கடந்த 2021-2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டில் குடிநீர் வரியாக ரூ.1.9 கோடியும், சொத்து வரியாக ரூ.1.5 லட்சமும் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள வரிபாக்கிகளை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொல்லியல்துறை கண்காணிப்பு அதிகாரி ராஜ்குமார் பட்டேல் கூறுகையில், நினைவு சின்னங்களுக்கு சொத்துவரி பொருந்தாது. மேலும் அங்கு தண்ணீரை வணிக ரீதியாக பயன்படுத்தாததால் நாங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. வளாகத்திற்குள் பசுமையை பராமரிக்க மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நோட்டீஸ் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

இதுதொடர்பாக நகராட்சி கமிஷனர் நிகில் பன்டே கூறுகையில், மாநிலம் தழுவிய புவியியல் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

நிலுவையில் உள்ள நிலுவைத்தொகையும் அடிப்படையில் அரசு கட்டிடங்கள் மற்றும் மதவழிபாட்டு தலங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளை பின்பற்றி சில இடங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொல்லியல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்கில் அவர்களிடம் இருந்து பெறப்படும் பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உதவி நகராடசி ஆணையரும், தாஜ்கஞ்ச் மண்டலத்தின் பொறுப்பாளருமான சரிதாசிங் கூறுகையில், செயற்கை கோள் படங்கள் மேப்பின் மூலம் தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது – என்றார்.

#India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version