இந்தியா

மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 100இற்கும் மேற்பட்டோர் பலி

Published

on

குஜராத்தில் பழுதுபார்க்கப்பட்டு, திறக்கப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றில், நேற்று மாலை, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான சாத் பூஜைக்காக ஒரே நேரத்தில் 500இற்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பூஜை செய்து பொருட்களை ஆற்றில் போட்டுக்கொண்டிருந்தனர். அதில் அதிகமானோர் பெண்கள் ஆவர். இந்நிலையில் திடீரென அந்த கேபிள் பாலத்தின் மத்திய பகுதி இடிந்து விழுந்தது.

இதனால் பாலத்தில் நின்றிருந்தவர்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தீயணைப்பு துறையினரும், உள்ளூர் மக்களும்,பொலிஸாரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக இந்த மீட்புப்பணி நடந்தது. இதில் அதிகாலை வரையில் 100இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்த போது 100இற்கு அதிகாமானோர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

இடிந்து விழுந்த பாலம், நேற்று முன்தினத்தில் இருந்தே மிகவும் ஆபத்தான நிலையில் ஆடிக்கொண்டிருந்தது. அப்படி இருந்தும் மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேர் அதன் மீது நின்று பூஜை செய்ததால் பாலம் இடிந்துவிட்டது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், கடந்த 26ஆம் திகதி குஜராத் புத்தாண்டு தினத்தன்று தான் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்டது. 7 மாதத்திற்கு முன்புதான் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டது. பாலம் இடிந்து விழுந்து ஏராளமானோர் கரைக்கு வர போராடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைக்கு வந்தனர். அதிகமானோர் இடிந்து விழுந்த பாலத்தை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

பிரதமர் மோடி இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் புபேந்தர பட்டேல் நடந்த சம்பவத்தற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு இழப்பீடும் அறிவித்துள்ளார்.

#India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version