இந்தியா

ஊடகத்துறையினருக்குத் தமிழக முதலமைச்சர் பாராட்டு!

Published

on

ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பல உயிர்களைச் சேகரித்துத் தந்த ஊடகத்துறையினருக்கு தனது பாராட்டுக்களைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் பகுதியில் ராஜீவ் காந்தி அரச பொதுமருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோய், விபத்து என உடல்நலக்குறைக்கு உள்ளான நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளி, புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளும் இங்கு உள்ளது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சில நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். தீ மளமளவென பரவத்தொடங்கிய நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில், விபத்து நடந்த இடத்தில செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் நோயாளிகளைச் சுமந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தன. மேலும், உதவி செய்த ஊடகவியலாளர்களுக்குப் பாராட்டுக்களும் குவிந்து வந்தன.

இந்தநிலையில், இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ருவிட்டரில், “சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு – நேரத்தின் அருமை உணர்ந்து – பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்! காலத்தால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!” – என்று அவர் பதிவிட்டுள்ளார்.

#IndianNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version