செய்திகள்
கோட்டாவுடனான 25ஆம் திகதி சந்திப்பில் பங்கேற்குமா ரெலோ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று நடைபெற இருந்த பேச்சு கடைசி நேரத்தில் ஜனாதிபதி செயலகத்தால் எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ள நிலையில், அந்தச் சந்திப்பில் பங்கேற்பதா? இல்லையா? என்று கூட்டமைப்பின் பங்காளியான ரெலோ இன்னமும் முடிவு எடுக்கவில்லை.
ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்பட்டிருப்பதால், ஏற்கனவே பேச்சில் கலந்துகொள்வதில்லை என்ற தமது கட்சி எடுத்த முடிவை எதிர்வரும் 19ஆம் திகதி மீளாய்வு செய்வோம் என்று ரெலோ தரப்பினர் தெரிவித்தனர் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது :-
“2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பின்னர் பிற்போடப்பட்ட ஜனாதிபதியுடனான கூட்டம் இன்று நடைபெற இருந்தது.
இந்தச் சந்திப்புக்கான திகதி எமக்கு அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மூவருடனும் பேசிய பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல.
ஜனாதிபதியுடன் பேசுவதற்கான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று காலை 10 மணியளவில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினோம்.
இதிலே தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரமும் கலந்துகொண்டனர்.
இன்று ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தால் தாம் அதில் கலந்துகொண்டிருக்கமாட்டோம் என்றும், ஆனால் இக்கூட்டம் பிற்போடப்பட்டிருப்பதால் எதிர்வரும் 19ஆம் திகதி தங்கள் கட்சி இந்த முடிவை மீளாய்வு செய்யும் எனவும் எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்தித்து தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலாக இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் பல தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login