செய்திகள்
முன்னாள் அமைச்சர் வேலுமணியை முடக்கியது – லஞ்ச ஒழிப்பு துறை!!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 57 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடந்தது.
எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான வீட்டிற்கு தென்காசி மாவட்ட டி.எஸ்.பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் வந்தனர்.
அவர்கள் வீட்டின் நுழைவு வாயில் மற்றும் கதவுகளை அடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.
பின்னர் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோன்று தொண்டாமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் பண்ணை வீட்டிலும் சோதனை நடந்தது.
சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு, அவர் நடத்தி வரும் அறக்கட்டளை அலுவலகம் மற்றும் கடையிலும் சோதனை நடந்தது.
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் என்ஜினீயருமான சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல் கோவை சேரன் மாநகரில் உள்ள சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெய ராம், வடவள்ளியில் உள்ள சந்திரபிரகாஷ், எஸ்.பி. வேலுமணியின் உதவியாளரான சந்தோஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கோவையில் மட்டும் மொத்தம் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்து பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இவர் அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
#IndiaNews
You must be logged in to post a comment Login