செய்திகள்

13 இற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!

Published

on

ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராகவும், சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியாவில் மாபெரும் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு முன்பாக இந்தப் பேரணி ஆரம்பமானது.

இப்பேரணியானது, ஏ – 9 வீதியூடாகச் சென்று தாண்டிக்குளம் – ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தை அடைந்து பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் பேரணியில் கலந்துகொண்ட மக்கள், “ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி சமஷ்டித் தீர்வை நடைமுறைப்படுத்து”, “சர்வதேச விசாரணை வேண்டும்”, “இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்”, “இந்த மண் எங்களின் சொந்த மண்”, “இராணுவமே வெளியேறு”, “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கு” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணி முடிவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தை நீக்கக் கோரி கடந்த ஜனவரி 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கிட்டு பூங்கா பிரகடனத்தை வலியுறுத்தி ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்ததுடன் தமிழர் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சி உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version