செய்திகள்

“ராஜபக்சக்களுடன் இணைய நாங்கள் முட்டாள்கள் அல்லர்” – விமல், கம்மன்பில கூட்டாகப் பதிலடி

Published

on

“எந்தத் தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையவேமாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்லர்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகப் பதிலடி வழங்கினர்.

‘முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தேர்தலொன்று வரும்போது எங்களைத் தேடி வருவார்கள்’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்து தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி., புதிய ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில எம்.பி. ஆகியோர் ஊடகங்களிடம் இன்று பதிலளிக்கும்போது,

“எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம். எந்தத் தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையவேமாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்லர்.

தேர்தல் அறிவிப்பு வந்ததும் எமது அதிரடி ஆட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் பார்ப்பார்கள்.

நாம் பதவிகளுக்காக அலைபவர்கள் அல்லர். பதவி ஆசை எமக்கு இருந்திருந்தால் அரசுக்குள் இருந்துகொண்டே அரசின் மோசமான செயல்களை விமர்சித்திருக்கமாட்டோம்.

நாட்டின் நலன் கருதியும், இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்தே உண்மைகளை வெளியில் உரக்கச் சொன்னோம்; அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தோம். அதனால் எமது அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி பிடுங்கி எடுத்தார்” – என்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version