செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர்கள் கச்சதீவில் நல்லெண்ணச் சந்திப்பு!

Published

on

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாடடில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களையும் ஆதங்கங்களையும் வெளியிட்டனர்.

குறிப்பாக, இந்தியக் கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறி எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாகப் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் கடற்றொழிலாளர்கள் சார்பாக, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் அன்னராசா உரையாற்றும்போது, தொப்புள் கொடி உறவுக்குத் தடையாக இருக்கின்ற இழுவைமடி வலைத் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு இந்தியக் கடற்றொழிலாளர்களை விநயமாகக் கேட்டுக்கொண்டதுடன், வளங்களை பாதிக்காத நாட்டுப் படகு போன்ற தொழில் முறைகளில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் நிபந்தனைகளுடன் வளங்களைப் பகிர்ந்துகொள்ள இலங்கைக் கடற்றொழிலாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, இதன்போது கருத்துத் தெரிவித்த இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள், இழுவைமடித் தொழிலால் வளங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததுடன், மாற்றுத் தொழில் முறைக்குத் தம்மைத் தயார்ப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இது தொடர்பான பேச்சுகள் நடைபெற்று வருகின்ற போதிலும் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், விரைவில் நடைபெறவுள்ள பேச்சுகளில் குறுகிய காலத்தை நிர்ணயம் செய்து, அந்தக் காலப் பகுதிகள் அனைத்து இந்திய இழுவைமடிப் படகுகளையும் மாற்றுத் தொழிலுக்குத் தயார்படுத்துவதற்கு உறுதியான பொறிமுறையை உருவாக்குவது சிறப்பானதாக இருக்கும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

அதேவேளை, தங்களின் படகுகள் ஏலத்தில் விற்கப்பட்டமை தமக்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக இந்தியக் கடற்றொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் பதில் அளித்த இலங்கை கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், பல்வேறு அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் வகையில் தரித்திருந்த படகுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை இந்தியக் கடற்றொழிலாளர்களால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சருக்குத் தொடர்ச்சியாக தாங்கள் வழங்கிய அழுத்தம் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தனர்.

இவ்வாறு இரண்டு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தமது ஆதங்கங்களை வெளியிட்ட நிலையில் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்றைய சிநேகிதபூர்வமான சந்திப்பில் இரண்டு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புக்களையும் ஆதங்கங்களையும் வெளியிட்டுள்ளமை ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புவதாகவும், விரைவில் இந்திய வெளிவிகார அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை வரவுள்ள நிலையில் அவருடனான சந்திப்பின்போது, கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உறவுகளைப் பாதிக்காத வகையில் தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகக் கலந்துரையாடப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று, இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், இலங்கைக் கடற்றொழிலாளர்களின் ஆதங்கத்தை ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும், இந்திய மற்றும் தமிழகத் தலைவர்களுக்கும் எடுத்துரைத்து விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் கூறினார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version