செய்திகள்
காணாமல்போனோர் குறித்து விசாரிக்க 25 குழுக்கள்!
காணாமல்போனோர் தொடர்பில் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன, இவை தொடர்பில் துரித விசாரணை செய்யும் நோக்கில் 25 விசாரணைக் குழுக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகள் நிறுவப்பட்டுள்ளதுடன், அப்பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் போனமை தொடர்பான 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காணாமல் போன ஆட்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்கல் உள்ளிட்ட அதிக பணிகளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சரே மேறபடி அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தார்.” – என்றார் அமைச்சர் டலஸ்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login