செய்திகள்
அரசுக்கு எதிராக ஹட்டனில் மாபெரும் போராட்டம்!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்த அரசுக்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஹட்டன் நகரில் நடைபெற்றது.
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதைச் சுட்டிக்காட்டியும், உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் பிற்பகல் 3 மணியளவில் ஹட்டன் நகர மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
“நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர் மின் விநியோகத் துண்டிப்பு இடம்பெறுகின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாள்தோறும் அதிகரிக்கின்றன. அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இவற்றின் காரணமாக மலையக மக்களும், இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்” என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login