செய்திகள்

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி சங்க கூட்டுறவு பணியாளர்கள் போராட்டத்தில்!

Published

on

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி சங்க கூட்டுறவு பணியாளர்கள் இன்று காலை 10 மணியளவில் சங்கானை பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க முன்றலில் போராட்டமொன்று முன்னெடுத்தனர்.

இப் போராட்டத்தில் பணியாளர்கள் “ஊதியத்தை அதிகரி, கிளை முகாமையாளரின் நியமனத்தை நிரந்தர நியமனமாக்கு, பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கு, வேலையோ அதிகம் சம்பளமோ குறைவு என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக 17 வருடங்களாக சங்கானை பனை தென்னை வள கூட்டுறவு சங்கத்திற்கு கிளை முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது பாரிய குறைபாடாக காணப்படுவதுடன் இதனால் நிர்வாக செயற்பாட்டினை கொண்டு நடாத்துவது பாரிய சிக்கல் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

ஆறு வருடங்களாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகின்ற ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை.

மேலும் எட்டு வருடங்களாக நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்களுக்கான பதவி உயர்வானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டிய நிலையில் குறித்த பதவியும் வழங்கப்படாது காணப்படுகின்றது.

இந்நிலையில் மரணித்தவர்கள் மற்றும் வேலையை விட்டு இடையில் விலகியவர்கள் பலர் காணப்படுகின்ற நிலையில் வேலை வாய்ப்புக்கள் வெற்றிடமாக காணப்படுகின்றன.

எமது சங்கானை சங்கத்தின் முகாமையாளர் எமக்கான பதவி உயர்வினை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து தனிப்பட்ட விரோதத்தை பழிவாங்குகிறார்.

அதுபோல யாழ். பிரதான சங்கத்தின் முகாமையாளரும் எமது பதவி உயர்வில் அக்கறை காட்டுவதில்லை – என்றனர்.

அதில் ஒரு ஊழியர் “நான் பதவி உயர்விற்கான நேர்முகத் தேர்விற்குரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கியிருந்த நிலையில் நேர்முகத் தேர்விற்கு சென்றேன்.

அங்கு நான் ஏற்கனவே வழங்கியிருந்த எனது ஆவணங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் வேறு ஆவணங்களையே வழங்கினேன் என்றார்.

தமக்கான தீர்வு கிடைக்கும்வரை தமது போராட்டம் தொடரும் என ஊழியர்கள் மேலும் தெரிவித்தனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version